Friday, May 23, 2014
Saturday, May 10, 2014
அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா 2014
அனைவருக்கும் இனிய வணக்கம்,
ஜூன் 2-ஆம் நாள் (02/06/2014) சித்திரை மாதம் 29-ஆம் நாள் திங்கள் மாலை சுமார் 4 மணிக்கு மேல் எங்களது கிராமத்தில் எழுந்தருளியுள்ள அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற இருப்பதால் பொது மக்கள், நண்பர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவினை சிறப்பித்து இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அரியலூர் ரயில் விபத்து 1956: கால வெள்ளத்தில் ஒரு பயணம்!
அநேக இரவுகளில் அந்த விபத்து எனக்குக் கனவாக வந்து பேயாட்டம் ஆடி நிம்மதியைக் குலைத்தது உண்டு. ஆண்டுகள் ஐம்பதுக்கும் மேல் கடந்தாலும் நினைவைவிட்டு அகலாத பயங்கரம். இந்தியாவில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்துகளில், காலத்தால் முந்தைய அரியலூர் ரயில் விபத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இப்போது அதை எழுதுவதன் மூலம் என்னவாகும்? என் நெஞ்சின் பாரம் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
இந்தியாவையே உலுக்கிய அந்த விபத்து 1956 நவம்பர் 23-ல் நடந்தது. 142 பயணிகள் இறந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் நானும் ஒருத்தி.
மான் வண்டி ரயில்
அப்போது எனக்கு வயது 21. சென்னையில் தூத்துக்குடி விரைவு ரயிலில் என்னுடைய அத்தையுடன் ஏறியிருந்தேன். இரவு 9.50மணிக்கு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டது. மூர்மார்க்கெட்டில் வாங்கிய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருள்கள், ஆடைகள், தின்பண்டங்கள் ஆகியவற்றுடன் நாங்கள் அந்த ரயிலில் ஏறியிருந்தோம். அந்த நீராவி ரயிலையே சான்டா கிளாஸின் மான் வண்டியாகக் கற்பனை செய்து மகிழ்ந்திருந்தேன்.
அந்த ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள். விருத்தாசலம் சந்திப்பு வந்தவுடன் கடைசி பெட்டியைக் கழற்றிவிடுவார்கள். அது சேலம் மார்க்கத்தில் செல்லும் ரயிலுடன் சேர்க்கப்படும். எஞ்சிய 12பெட்டிகளுடன் ரயில் பயணத்தைத் தொடரும். நாங்கள் எட்டாவது பெட்டியில் இருந்தோம். எங்கள் வரிசையில் எங்களைத் தவிர வேறு யாருமில்லை. லேசான இரவு ஆகாரத்துக்குப் பிறகு நாங்கள் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தோம். திடீரென்று ரயில் பெருத்த ஓசையுடன் குலுங்கி நின்றது. அது சாதாரணமான குலுக்கல் அல்ல; அண்ட சராசரங்களும் வெடித்துச் சிதறியதைப்போன்ற குலைநடுங்க வைக்கும் குலுக்கல். என்ன நடந்தது என்றே புரியவில்லை. நீராவி என்ஜின் ஓலமிடும் ஓசை லேசாகக் கேட்டது. "ஐயோ காப்பாத்துங்க"என்ற மரண ஓலம் காதுகளைத் துளைத்தன. "ஆ…" "ஊ…" என்று ஒரே அலறல். அந்தக் கூச்சல்கள் எங்களுக்குள் பீதியை ஏற்படுத்தின. பெஞ்சிலிருந்து தரையில் விழுந்த நாங்கள் சுதாரித்துக்கொண்டு எழுந்தோம்; ரயில் பெட்டிக்கு வெளியே குதித்துவிட நான் வேகமாக முற்பட்டபோதுதான் என் அத்தை வெளியே பார்த்துவிட்டு கத்தினார்: "ஜாய்ஸ், குதிக்காதே, நாம் ஆற்றின் மீது இப்போது இருக்கிறோம்…"
மருதையாற்றின் சீற்றம்
அரியலூர் – கல்லாகம். இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையில் மருதையாறு ஓடுகிறது. அன்றைக்குச் சரியான மழை. மருதையாறு இரு கரைகளையும் அடைத்துக்கொண்டு ஓடியிருந்திருக்கிறது. இரவு நேரம் கூடக்கூட வெள்ளப்பெருக்கு அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து ரயில் பாலத்தைத் தொட்டுக்கொண்டும் ரயில் பாதையை அரித்துக்கொண்டும் ஓடியிருக்கிறது. ரயில் பாலத்தை ஒட்டியிருந்த கரை சுமார் 20 அடி நீளத்துக்கு வெள்ளத்தால் அரிக்கப்பட்டிருக்கிறது. பாலம் பலகீனமாக அதன் மோசமான முடிவுக்குக் காத்திருந்த நிலையில்தான், எங்கள் ரயில் அதை நெருங்கியிருக்கிறது. இருள் கவிந்த இரவில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பாலத்துக்கு ஏற்பட்ட சேதம் ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரியவில்லை.
அரியலூர் நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மைல்கள் தாண்டிய ரயில், மருதையாற்றுப் பாலத்தின் மீது பாதையைவிட்டு இறங்கி தடம் புரண்டது. ரயிலின் நீராவி என்ஜினும், ஏழு ரயில் பெட்டிகளும் அப்படியே ஆற்றுக்குள் சரிந்தன; ஒரு பார்சல் வேனும் இதில் அடக்கம். எட்டாவது பெட்டி பாதையைவிட்டு முறுக்கிக்கொண்டு தடம் புரண்டிருந்தது. கடைசி நான்கு பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தின் மீது நின்றன
உயிர்ப் போராட்டம்
கூற்றுவனின் பாசக்கயிற்றில் சிக்கிக்கொண்ட பொம்மையைப் போல,நான் அந்த ரயில் பெட்டிக்குள்ளேயே அச்சத்திலும் பீதியிலும் உறைந்திருக்கிறேன். கைக்கடிகாரம் அப்போது அதிகாலை மணி 5.30என்று காட்டுகிறது. ரயில் பெட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால், ஆக்ரோஷமான மருதையாறு நொப்பும் நுரையுமாக ஆவேசத்துடன் பாய்ந்துகொண்டிருந்தது. மரங்கள், செடிகொடிகள்,ரயிலில் வந்தவர்களின் மூட்டைகள், ரயில் பெட்டியில் ஏற்றியிருந்த கட்டுகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உயிரற்ற சடலங்கள் ஆற்றுநீரில் விழுந்தும் மூழ்கியும் மேலே கிளம்பியும் அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்பட்டும் அச்சமூட்டுகின்றன.
மனதுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ரயில் பெட்டிக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தபோது ரயிலின் கார்டு, அந்தப் பாலத்தின் ஓரத்திலிருந்த ஒரு கல் மீது நின்றபடி எங்களைப் பார்த்து ஏதோ கத்தினார். "வெளியே வாருங்கள், உங்கள் பெட்டி தடம் புரண்டிருக்கிறது…"
உடனே என்னுடைய அத்தை என்னைப் பார்த்து, "என் பின்னாலேயே வா" என்று உரக்கக் கத்திவிட்டு அந்த ரயில் பெட்டியைவிட்டு வெளியேறத் தயாரானார். அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்த நான் "என்னால் முடியாது" என்று அழுதுகொண்டே அவரைக் கட்டிக்கொண்டேன். என் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அத்தை மிகவும் சிரமப்பட்டு ரயில் பெட்டியின் கைப்பிடியைத் திருகி கதவைத் திறந்தார்.
ஓர் அடி நூறு மைல்
பிறகு ஆற்றின் மீது தொங்கியபடி நின்ற அந்தப் பெட்டியின் படிகளில் வெகு கவனமாகக் கால்களை வைத்து மெதுவாகக் கீழே இறங்கினார். பிறகு அடுத்த பெட்டியின் ஜன்னல், அதற்கடுத்த ஜன்னல் என்று ஒவ்வொன்றாகத் தொற்றித்தொற்றி, தாவித்தாவி அந்த ரயிலின் கடைசிப் பகுதி நோக்கி முன்னேறினார். அவரைப் போலவே நானும் ஜன்னல்களைப் பற்றி தாவித்தாவி அவரைப் பின்தொடர்ந்தேன். ஜன்னல் ஜன்னலாகத் தாவியபோது இதயம் படபடவென அடித்துக்கொண்டது, பற்கள் கடகடவென தந்தியடித்தன. எங்காவது ஓரிடத்தில் கைப்பிடியை நழுவவிட்டாலும் ஆற்றில் விழ வேண்டியதுதான் என்பதால் மனதில் பீதியும் அச்சமும் நிரம்பியிருந்தது. எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் நூறு மைல் பயணமாக உணர்த்தின. அச்சத்திலும் பீதியிலும் வேகவேகமாக பெட்டிக்குப் பெட்டி தாவியதாலும் பழக்கம் இல்லாததாலும் பெட்டியின் கம்பிகள் அறுத்து கைகளில் தோல் உரிந்து காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது. கால்முட்டிகளும் ரணமாகி வீங்கத் தொடங்கின.
சாவை உணர்தல்
டென்னிஸனின் 'தி சார்ஜ் ஆஃப் த லைட் பிரிகேட்' கவிதையில் உள்ள "சாவின் பள்ளத்தாக்கில் நான் நடந்தேன்" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. எங்களிருவரைப் போலவே வேறு சில பயணிகளும் ஜன்னல் ஜன்னலாகத் தாவி ரயில் பெட்டியின் கடைசிப் பகுதிக்கு வந்தார்கள். ஒருவழியாக மண்ணைத் தொட்டபோது அழுகை நெஞ்சை அடைத்தது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. ரயில் பாதையின் இருபுறங்களிலும் சீறிவரும் வெள்ளத்துக்கு இடையே, மீட்டுச் செல்ல வருவோருக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம்.
ஆற்றில் அந்த வெள்ளத்தின் சீற்றம் படிப்படியாகத் தணிய சுமார் நான்கு மணி நேரம் ஆனது. வெள்ளம் அடங்கி ஆற்றின் இரு கரைகளுக்குள் ஒடுங்கி ஆறு பழையபடி ஓடத் தொடங்கியபோது ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சொருகியிருந்த சடலங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. நீர்மட்டத்துக்கு மேலே வருவதும் பிறகு நீரில் மூழ்குவதும், நீரில் அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்படுவதுமாக இருந்தன. மீட்பு ரயில் எங்களை அழைத்துச் செல்ல வந்தது. உயிர் பிழைத்தவர்களின் ஆயாசப் பெருமூச்சும் விசும்பல்களும், உற்றார் – உறவினரை இழந்தவர்களின் சோகக் குரல்களும் சூழ அந்த ரயில் நகர ஆரம்பித்தது.
யார் இந்த ஜாய்ஸ்?
அரியலூர் விபத்து நடந்த காலகட்டத்தில் பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்தவர் ஜாய்ஸ் தெற்கு ரயில்வேயில் கார்டாகப் பணிபுரிந்த கிளாரன்ஸ் வர்ணம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு மதுரையில் குடியேறினார். இரு குழந்தைகள். 1982-ல் விருப்ப ஓய்வுபெற்றவர் கணவர் கிளாரன்ஸ் வர்ணத்தின் மரணத்துக்குப் பிறகு, 1996-ல் ஜாய்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். மெல்போர்னில் தன் பிள்ளைகளுடன் வசிக்கிறார். அரியலூர் விபத்து ஜாய்ஸை ரொம்பவே படுத்தியது. விபத்துக்குப் பிறகு ரயில் என்றாலே அலற ஆரம்பித்தார். தூக்கத்தில் அடிக்கடி விபத்தைக் கண்டு நடுக்கத்துக்குள்ளானவர் தூக்கத்தில் நடக்கும் பாதிப்புக்கும் ஆளானார். காலம் செல்ல செல்ல ரயில் பயம் குறைந்து அரியலூரை ரயிலில் கடக்கும் அளவுக்கு தன் மனதை பலப்படுத்திக்கொண்டாலும் இந்த எண்பது வயதிலும் ரயிலைப் பார்க்கும்போது அவர் கண்கள் நனைகின்றன.
Info Credit - Thanks to: http://tamil.thehindu.com/opinion/reporter-page
Subscribe to:
Posts (Atom)