Monday, October 19, 2015

CTK Group - நண்பர்கள் குழுமம் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம்!

அணைவருக்கும் வணக்கம்,
CTK நண்பர்கள் குழும சமூகநல அமைப்பானது நமது கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும், சிங்கப்பூர் மற்றும் மற்ற அயல்நாடுகளில் பணியாற்றும் இளைஞர்களின் நிதியினையும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. (பண்டிகை காலங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்காகவும், திருவிழாக்காலங்களில் .’.ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமே தொடங்கப்பட்ட குழும அமைப்பு இதுவல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்)

பொருளாதார அளவீட்டின்படி நமது கிராமம் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டாலும், மானுட சமுதாயத்தின் அவசியத்தேவையும், மனுகுலத்தின் அசுர சக்தியுமான ஒற்றுமை என்பது, நாளுக்கு நாள் நம்மிடையே கரைந்து கொண்டே போகிறது. சாதியைச்சொல்லியும், இனத்தைச் சொல்லியும், உறவுமுறைகளைக் கொண்டும், பேதம் பாராட்டிய காலம் சென்று, இன்று பணம் ஒன்றே தகுதியையும், தராதரத்தையும், மரியாதையையும் நிர்ணயிக்கும் அளவுகோலாகி விட்டது. இதனால் சகமனிதர்களுக்கிடையேயான அன்பும், மனிதநேயமும், உதவும்பாங்கும், ஒற்றுமையும் மலிந்து போட்டிகளும் பொறாமைகளும் வஞ்சம், சூழ்ச்சி, துரோகம் முதலிய கீழ்த்தரமான குணங்களும் மேலோங்கிவிட்டது. 

போட்டிகள் நிறைந்த இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் மனிதன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்திக்கொண்ட திருவிழா, பண்டிகை போன்ற கொண்டாட்டமான நிகழ்வுகள்கூட தனிமனித விருப்பு வெறுப்புகள் மற்றும் அரசியலின் காரணமாக தடைபட்டு போகும் அளவுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுவது இதன் மோசமான விளைவுகளில் ஒன்றாகும்.(திருவிழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுவதில் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருந்தவர்கள்)

ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலும், ஒருவருக்கொருவர் சிண்டு முடிதலிலும், புறம்பேசுதலிலும், பகை வளர்ப்பதிலுமே நமது அப்பா, தாத்தாக்களின் தலைமுறை காலம் கழிக்கிறது என்றாலும் ஒரே ஒரு ஆறுதலான விடயம் நம் இன்றைய தலைமுறை இளைஞர்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் இதிலிருந்து விலகி நிற்பதுவும், இவை அனைத்தையும் அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுவும்தான். அவர்கள் நம் முந்தைய தலைமுறையை பின்பற்றவும், பின்தொடரவும் விரும்பவில்லை. அதனை அவமானமாகக் கருதுகிறார்கள். அதேசமயம் தமிழ்நாட்டின் மூலையில் ஏதொ ஒரு கடைகோடி கிராமத்தில் பிறந்த தனி ஒருவனாகிய நம்மால் இந்த கிராமத்திற்கோ, சமூகத்திற்கோ என்ன செய்துவிடமுடியும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான் எனினும் நம் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்து விட துடிக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களை ஒரே குடையின் நிழலில் ஒற்றுமை கொண்டவர்களாக நிறுத்துவதே நமது கிராமத்திற்காக குழும சமூகநல அமைப்பு தொடங்க வேண்டியதன் அவசியமாய் இருக்கிறது. அதோடு நின்றுவிடாமல் இவர்களைக்கொண்டே நமது கிராம வளர்ச்சி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்தவும் குழும அமைப்பு முடிவு செய்துள்ளது.

எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் உதவும் நண்பர்கள் அழைத்து ‘நீங்க எடுத்து வெச்சிருக்கிறது முதல் படி....இன்னும் போக வேண்டிய தூரம் வெகுதூரம் இருக்கு’ என்றார்கள். எவ்வளவு உண்மை? இப்பொழுதுதான் முளைத்திருக்கிறோம். இந்த உத்வேகத்தையும், இதுபோன்ற நல்ல நண்பர்களின் வாழ்த்துக்களையும் எந்தவிதத்திலும் சிதைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் ஒன்று உழைக்க தயாராக இருந்தால் போதும் மற்றவை எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். நேர்மையான உழைப்பு மட்டும்தான் நமக்கான மரியாதையை பெற்றுத் தரும். மற்றது எல்லாமே அப்புறம்தான். வெறியெடுத்துத் திரிய வேண்டும். வேறு எந்த சூத்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. நமது பாதையை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். முடிவு செய்த பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறோமா என்பதை மட்டும் பார்த்து கொண்டால் போதும். கடவுள் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. கடமையை மட்டும் செய்து கொண்டிருந்தால் போதும். பலனை அவர் கொடுத்து விடுவார்.

இதுவரை, சிங்கப்பூரில் பணிபுரியும் நமது கிராம நண்பர்களும், மற்ற அயல் நாடுகளில் பணிபுரியும் (மலேசியா, துபாய், சவுதி, குவைத், பக்ரீன்) நமது கிராம நண்பர்களும் மற்றும் கிராமத்திலுள்ள சில இளைஞர்களும், மாணவர்களும் CTK நண்பர்கள் குழும அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். குழும சமூகநல அமைப்பில் புதிதாக இணைய விரும்பும் நண்பர்கள், மாணவர்கள் இணைந்து அமைப்பின் கரங்களை வலுப்படுத்த வேண்டுகிறோம். செட்டிதிருக்கோணம் கிராமத்தின் வளர்ச்சியில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பது நமது கிராமத்தில் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

CTK Group - நண்பர்கள் குழுமம் பற்றி (About us CTK Group):-

* CTK நண்பர்கள் குழுமம் ஒரு தன்னார்வ சமூகநல அமைப்பாகும். முழுக்க முழுக்க நமது கிராமத்தின் வளர்சிக்காகவும், கல்வி மேம்பாட்டிற்காகவும் மற்றும் மாணவர்களின் நலனுக்காகவும் தொடங்கப்பட்டுள்ளது.

* CTK நண்பர்கள் குழும அமைப்பானது சிங்கப்பூர் மற்றும் மற்ற அயல்நாடுகளில் பணியாற்றும் நமது கிராம நண்பர்களின் நிதியினை ஆதாரமாகக்கொண்டும், கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும்கொண்டும் செயல்படுகிறது.

* நமது கிராம இணையதளத்தின் மூலம் (www.chettithirukkonam.com) கிராமத்தைப்பற்றிய அனைத்துவிதமான தகவல்கள், தரவுகள், சான்றுகளை தெளிவான ஆவனங்களுடன் பதிவு செய்து அடுத்த தலைமுறையினருக்கு பயனுள்ள வகையில் முன்னெடுத்து செல்வது.

* குழும அமைப்பில் யாருக்கும் அதிகாரம் கொண்ட எந்த பதவியுமின்றி கிராம நலனுக்காக உறுப்பினர்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. குழுமத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும், தவறுகளை சுட்டிகாட்டவும் உரிமை உள்ளது.

”இது தற்பெருமையோ அல்லது சுயவிளம்பரம் தேடும் வணிகமோ அல்ல. ஒரு தீக்குச்சியின் கனநேரச்சுடர் அணைவதற்குள் சில விளக்குகளை ஏற்றிவிடத் துடிக்கும் ஜுவாலையின் தவிப்புதான் நமது குழும அமைப்பின் நோக்கமாகும்”.

உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அத்தனை பேருக்கும் இதயப்பூர்வமான அன்பின் நன்றிகளை தெரிவித்துகொள்வதில் CTK நண்பர்கள் குழும சமூகநல அமைப்பு பெருமையடைகிறது.

Regards,





CTK GROUP FRIENDS ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
(CTK Village of Social Work)

செட்டித்திருக்கோணம் கிராமம்




Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment