கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி.
ஆழி சூழ் உலகு என்பதுபோல, அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. வடக்கை வென்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றித்தூணை நீர்மயமாக உருவாக்கிய பொன்னேரி என்ற சோழகங்கமே இந்த பெருமையைச் சொல்லும். இந்த வரிசையில் மற்றொன்று, 40 ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்புக்கு ஈடுகொடுத்த காமரசவள்ளி ஏரி.
வறண்டு கிடக்கும் கங்கைகொண்ட சோழபுரத்து பொன்னேரியின் தோற்றம். |
இவை தவிர திருமழபாடி ஏரி, ஜெயங்கொண்டம் ஆவேரி, செம்பியன் மாதேவி பேரேரி மற்றும் விக்கிரமங்கலம், செட்டித்திருக்கோணம், தவுத்தாய் குளம், அரசு நிலையிட்டான், குறிஞ்சான் குளம், சென்னிவனம், தாமரை குளம், மல்லான்குளம், மரவனேரி என ஊர்தோறும் கிராமம் தோறும் ஏரிகள் உண்டு. பொதுப்பணித் துறையினரின் 69 ஏரிகள் மட்டுமல்லாது, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாய் மொத்தம் 1,662 ஏரிகள் ஆவணக் கணக்கில் வருகின்றன. இன்று அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியிலும், பராமரிப்பின்றியும் அழிவின் விளிம்பிலும் இருக்கின்றன.
அரியலூரை உதாரணமாக்கி நம் முன்னோர் ஏரிகளைப் பராமரித்ததன் பாரம்பரியம் குறித்து சொல்கிறார், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் பகுதியின் வரலாற்று ஆய்வாளருமான இல.தியாகராஜன்.
“அன்றைய சமூகவாரியான தனி ஏரிகள் உட்பட, ஊர்தோறும் ஏராளமாய் ஏரிகள் உண்டு. ஏரி உருவாக்கலில் தலைக்கு ஒரு குழி என்ற கணக்கில் ஊரார் உழைப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட, குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக நீர்நிலைகளைச் சார்ந்திருந்ததால் வீடுதோறும் 10-80 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயம் ஏரி வெட்ட வந்தாக வேண்டும். ஏரிவாரியம் மற்றும் கிராம நிர்வாக சபைகள் இவற்றைக் கண்காணித்து ஒருங்கிணைக்கும்.
எந்தவொரு ஏரியின் வரத்துவாய்க் கால்களையும் யாரும் அடைக்கக் கூடாது. நீர்வரத்து அதிகரித்து ஒரு ஏரி நிரம்பி தளும்பினால், அடுத்த ஏரிக்கு தானாக நீர் செல்லுமாறு திட்டமிடப்பட்டிருந்தன. பொன்னேரி நிரம்பினால், வாய்க் கால்கள் வீராணத்துக்கு நீரை கொண்டுசெல்லும். ஏரி பராமரிப் புக்காக, மாரிக் காலத்தில் மீன் பிடிப்பு குத்தகை விடப்பட்டது. இதுவே கோடைக் காலத்தில் வறண்டு போகும் ஏரிப்பரப்பின் களிமண், புஞ்சை நிலத்தை வளப்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டது.
‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், பாளையக் காரர்கள், ஜமீன்தார்கள் என வழிவழியாக வந்த ஏரிகளைக் காக்கும் மரபு இன்று வழக்கொழிந்திருக் கிறது. அதன் பலனை அரியலூர் மக்கள் இன்று அறுவடை செய்துகொண்டிருக் கிறார்கள்” என்றார் இல.தியாகராஜன். நமது முன்னோரின் நீராதார பொக்கிஷங்களை, வரும் சந்ததி யினருக்கு சேதாரமின்றி விட்டுச் செல்வதாவது நமது பங்களிப்பாக இருக்கட்டும்.
Information Courtesy: Thanks to Thehindu.com
அன்புடன்,
|
0 Responses So Far:
Post a Comment